MLC 23:இரண்டாவது தகுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ் தோல்வி… பைனலில் மும்பை நியூயார்க்.!
பைனலுக்கு செல்லும் இரண்டாவது அணி எது என்பதில் நடந்த சேலஞ்சர் போட்டியில் சூப்பர் கிங்க்ஸை வீழ்த்தி மும்பை நியூயார்க் தகுதி.
அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் அறிமுக சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று (சேலஞ்சர்) போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை நியூயார்க் மற்றும் முதல் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின.
இதில் டாஸ் வென்ற நியூயார்க் அணி பந்துவீச்சை தேர்வு செய்து, விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்பதால் இரு அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. முதலில் பேட் செய்த டெக்சாஸ் அணி, நியூயார்க் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கான்வே 38 ரன்களும் மிலிந்த் குமார் 37 ரன்களும் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூயார்க் அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 19ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
சிறப்பாக பந்துவீசி டெக்சாஸ் அணியின் 4 விக்கெட்களை வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை நியூயார்க் அணி 31 ஆம் தேதி நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற்றது. பைனலில் சியாட்டல் ஆர்கஸ் மற்றும் மும்பை நியூயார்க் அணிகளும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.