வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!
லக்னோ அணி 11 கோடி கொடுத்து தக்க வைத்த வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார்.

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பந்துவீச்சையும் வலுவடைய வைக்கும் வகையில் அணிக்கு மயங்க் யாதவ் திரும்பியுள்ளார். 156.7 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த இளம் வீரர், காயம் காரணமாக சீசனின் முதல் பகுதியில் விளையாட முடியாமல் இருந்தார். ஆனால், இப்போது முழுமையாக குணமடைந்து, LSG அணியுடன் இணைந்து தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்த தயாராக உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர், தனது அபாரமான வேகத்தால் IPL அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியவர். 2022 ஆம் ஆண்டு LSG அணியால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், கடந்த சீசன்களில் தனது வேகமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுத்தார் என்று சொல்லலாம். உதாரணமாக கடந்த ஆண்டு (2024) 156.7 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி, IPL வரலாற்றில் மிக வேகமாக பந்து வீசியவர் என்கிற சாதனையை படைத்தார்.
மயங்க் யாதவ் காயம் காரணமாக விளையாட முடியவில்லை. இவரது கால் விரல் காயம் மற்றும் பிற உடல் பிரச்சனைகள் காரணமாக விளையாடாமல் இருந்தார். தீவிர பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு, மயங்க் முழுமையாக குணமடைந்துள்ளார். இந்தியா டுடேயின் அறிக்கையின்படி, மயங்க் யாதவ் ஏப்ரல் 15, 2025 அன்று LSG அணியுடன் இணைந்தார். லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், மயங்கின் காயம் பற்றி பேசுகையில், அவர் அணிக்கு திரும்பியுள்ளது பெரிய பலம் என்று சொல்வேன். இது அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும்” அவர் தெரிவித்தார்.
லக்னோ அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. அந்த போட்டிக்கு முன்னதாகவே மயங்க் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 4 போட்டிகள் மட்டுமே விளையாடிய மயங்க் யாதவ் 7 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். அதைப்போலவே இந்த ஆண்டும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.