இந்தியாவுக்காக விளையாட வேண்டும்! மனம் திறந்த மயங்க் யாதவ்!
ஐபிஎல் 2024 : இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது தான் கனவு என மயங்க் யாதவ் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின் கூறியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கும் மயங்க் யாதவ் மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இவருடைய பந்துவீச்சை பார்த்த ரசிகர்கள் மற்றும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டிப்பாக மயங்க் யாதவ் இந்திய அணிக்காக வரும் டி20 உலகக்கோப்பையில் விளையாடவேண்டும் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் கூறியதை போலவே, இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு என்றும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த போது மயங்க் யாதவ் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனை தொடர்ந்து பேசிய மயங்க் யாதவ் ” இந்த போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைப்போல எங்களுடைய அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று இருக்கிறது என்பது இன்னுமே மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு இந்திய அணிக்காக நான் விளையாடவேண்டும் என்பது கனவு என்று சொல்வேன். என்னுடைய எண்ணமும் தற்போது அதுவாக தான் இருக்கிறது. அதனை நோக்கி தான் நகர்ந்து கொண்டு இருக்கிறேன் என்று உணர்கிறேன். இப்போது தான் என்னுடைய பயணம் தொடங்கி இருக்கிறது. இது எல்லாம் ஆரம்ப புள்ளி தான். முழுக்க முழுக்க நான் தற்போது கிரிக்கெட்டில் தான் நின்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறேன்” எனவும் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார்.