இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்… ஒரே போட்டியில் பல சாதனை படைத்த மேக்ஸ்வெல் ..!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
292 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவரில் 7 விக்கெட் இழந்து 293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 128 பந்திற்கு 21 பவுண்டரி ,10 சிக்ஸர்கள் என மொத்தம் 201* ரன்கள் குவித்தார். உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக க்ளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தார்.
ரன் சேஸில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். மேக்ஸ்வெல் கிரீஸுக்கு வந்தபோது, ஆஸ்திரேலியா பின்தங்கிய நிலையில் இருந்தது. அப்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானின் வெற்றி உறுதியாகத் தெரிந்தது. ஆனால் மேக்ஸ்வெல் அதிரடியாக பேட்டிங் செய்து போட்டியின் போக்கை மாற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 292 ரன்கள் தேவைப்பட்டது. இதில் மேக்ஸ்வெல் 201 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ரன் சேஸ் இதுவாகும்.
பாட் கம்மின்ஸுடன் சிறந்த பார்ட்னர்ஷிப்:
போட்டியின் போது முதுகு வலியால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல் முஜீப்பின் ஓவரில் 5 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார். மறுமுனையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் நின்றார். மறுமுனையில் இருந்த பாட் கம்மின்ஸ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். அவர் 68 பந்துகளில் வெறும் 12* ரன்கள்எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இருவருக்கும் இடையே 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்க்கப்பட்டது.ஒருநாள் போட்டிகளில் ஏழாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்து அடித்த அதிக ரன்கள் இதுவாகும்.
இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்:
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை கிளென் மேக்ஸ்வெல் பெற்றார். இந்த போட்டியில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் அடித்தார். ஒருநாள் போட்டியில் ரன் சேஸில் அடித்த மிகப்பெரிய ரன் இதுவாகும். முன்னதாக இந்த சாதனை பாகிஸ்தானின் ஃபகார் ஜமான் பெயரில் இருந்தது. 2021-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ரன் சேஸில் 193 ரன்கள் எடுத்தார்.
ஷேன் வாட்சனின் சாதனை முறியடிப்பு:
2011-ல் வங்கதேசத்துக்கு எதிரான் போட்டியில் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் 185* ரன்கள் எடுத்தார். இதனால் ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனை ஷேன் வாட்சன் பெயரில் இருந்தது. இந்த சாதனையை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.
உலகக்கோப்பையில் 3-வது இரட்டை சதம்:
உலகக்கோப்பையில் மூன்றாவது இரட்டை சதத்தை அடித்த வீரர் கிளென் மேக்ஸ்வெல். முன்னதாக 2015 உலகக் கோப்பையில், நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 235* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே ஆண்டு கிறிஸ் கெய்ல் 215 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது அதிவேக இரட்டை சதம்:
ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் பெயரில் உள்ளது. கடந்த 2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இன்றைய போட்டியில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 138 களில் இரட்டை சதம் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 11 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அதிகபட்சமாக 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதல் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் மேக்ஸ்வெல்லுக்கு உண்டு. நடப்பு உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 40 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு முன் நடப்பு உலகக்கோப்பையில் 49 பந்துகளில் சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ராம் சாதனையையும் மேக்ஸ்வெல் முறியடித்தார்.