யோவ் மிலிட்டரி நீ என்ன இங்க? ‘டக் அவுட்’ டாப் லிஸ்டில் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா…
நேற்றைய போட்டியில் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனதை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் 2ஆம் இடத்தில் உள்ளனர்.

அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது.
இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 11வது ஓவரில் களமிறங்கிய இவர் , குஜராத் வீரர் சாய் கிஷோர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ விக்கெட் ஆகி ரான் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார். இது அவரது 19-வது டக் அவுட்ஆகும். இதற்கு முன்பு அவர் 18 போட்டிகளில் ரன் எதுவும் எடுக்காமல் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் இந்த பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதிக முறை டக் அவுட் :
கிளென் மேக்ஸ்வெல் – 19 முறை டக் அவுட் ஆகியுள்ளார். 2008 முதல் ஐபிஎல்-ல் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு என பல அணிகளுக்கு விளையாடியுள்ள அவர் இந்த மோசமான சாதனையை மார்ச் 24, 2025-ல் எட்டியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் – 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 2008 முதல் 257 போட்டிகளில் விளையாடி 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அவர் டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா, பெங்களூரு போன்ற அணிகளுக்காக ஆடியுள்ளார்.
ரோஹித் சர்மா – 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரரும், இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா, நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆகி, 18 வது டக் அவுட் என இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். 251 இன்னிங்ஸ்களில் இந்த மோசமான சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.
சுனில் நரைன் – 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சுனில் நரைன், தனது 108 இன்னிங்ஸ்களில் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். பெரும்பாலும் ஓப்பனராகவோ அல்லது கீழ் வரிசையிலோ ஆடும் அவர், இந்த பட்டியலில் உள்ளார்.
பியூஷ் சாவ்லா– 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, ஐபிஎல்-ல் பல அணிகளுக்காக (பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, மும்பை) விளையாடியுள்ளார். 91 இன்னிங்ஸ்களில் 16 டக்அவுட்களை பதிவு செய்துள்ளார்.
இந்த மோசமான சாதனைகள், கிரிக்கெட்டில் எவ்வளவு திறமையான வீரர்களும் சில சமயங்களில் தோல்வியை சந்திக்கிறார்கள் என்பதை வெளிகாட்டுகிறது. இருந்தாலும் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் போன்றோர் பல்வேறு இக்கட்டான சமயத்தில் அணிகள் இருந்த போதும் தங்கள் அதிரடி ஆட்டத்தை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.