2 உலகக்கோப்பைகளை தட்டிசெல்ல காரணமான வெ.இண்டீஸ் வீரருக்கு அதிரடி தடை..!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்லன் சாமுவேல்ஸ் மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சூதாட்ட புகார் வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் அபுதாபி டி10 லீக்கில் விளையாடினார். அப்போது கிரிக்கெட் சட்ட விதிகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது.

மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என அறிவிப்பு:

கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதியின்படி, 750 டாலருக்கு மேல் பரிசு பொருளாகவோ அல்லது வேறு வழியிலோ தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரருக்கு பணம் வந்தால், அது குறித்து தொடரை நடத்தும் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும்.  ஆனால் சாமுவேல் அதை நான்கு முறை மீறியதோடு, அது குறித்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர மறுத்ததாக கூறப்பட்டது. இந்த புகார் குறித்த விசாரணை 2021-ஆம் ஆண்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

6 ஆண்டு விளையாட தடை:

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸுக்கு ஐசிசி 6 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது. ஐசிசி மனிதவள மற்றும் ஒருமைப்பாடு பிரிவு தலைவர் அலெக்ஸ் இந்த தடையை அறிவித்தார். சாமுவேல் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2008-இல் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பணம் மற்றும் பிற வெகுமதிகளை பெற்றதற்காக அவருக்க 2 ஆண்டுகள் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

சாமுவேல்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்காக 300-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.  சாமுவேல்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்காக 71 டெஸ்ட் போட்டிகள், 207 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 67 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதில் 17 சதங்கள் உட்பட 11,134 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் 152 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2012 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாமுவேல் அதிரடி பேட்டிங் மற்றும் பவுலிங்கால் மட்டுமே மேற்கிந்திய தீவு சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆட்டநாயகன் விருது:

இந்த  இரண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும்  சாமுவேல்ஸ் அதிக ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சாமுவேல்ஸ் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்