“இந்த வெற்றி செல்லாது” ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
4வது டி20யில் சிவம் துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா பவர் பிளேயில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
ரின்கு சிங், அபிஷேக் சர்மா சற்று நிலைத்து ஆடினர். அதன் பிறகு களமிறங்கிய ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 53 ரன்கள் எடுத்திருந்தார்.
அப்போது இறுதி ஓவரில் ஜேமி ஒவர்டன் வீசிய பந்து ஷிவம் துபே ஹெல்மெட்டில் பட்டுவிட்டது. உடனடியாக மருத்துவ குழு களத்திற்கு வந்து முதலுதவி செய்தனர். இதனை அடுத்து சில பந்துகள் எதிர்கொண்டு ரன் அவுட் ஆகி பெவிலிலியன் திரும்பினார் துபே. உடனடியாக 2வது இன்னிங்ஸ் தொடங்கப்பட்ட நிலையில் துபே களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ராணா களமிறங்கினார்.
துபேவுக்கு பதில் ராணா :
ஷிவம் துபே ஒரு ஆல் ரவுண்டர். சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன். அவருக்கு களத்தில் காயம் ஏற்பட்டால் இன்னொரு ஆல் ரவுண்டர் தான் களமிறக்கப்பட வேண்டும். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டார். இது அங்கு பெரும் சர்ச்சையாக மாறியது. ராணா ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் தனது பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
ராணா அசத்தல் :
துபேவுக்கு பதிலாக களமிறங்கிய ராணா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஒவர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஸ்னாய் 3 விக்கெட் வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்து இந்திய அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகளை வென்று டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
பட்லர் அதிருப்தி :
இந்த போட்டிக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், ” ராணா தனது விளையாட்டை நன்கு மேம்படுத்தியுள்ளார். நாங்கள் சிறப்பாக பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதில் நங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த தோல்வியில் எங்களுக்கு முழு உடன்பாடு இல்லை. ” என்று கூறினார்.
மேலும், ” ஹர்ஷித் ராணா போட்டியில் களம் இறங்கியது பற்றி எங்களுக்கு தெரியாது. இந்த முறை ‘வீரர் மாற்று’ ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் களத்திற்கு வந்த போதுதான் இவர் (ராணா) ஏன் இங்கு இருக்கிறார் என்று யோசித்தேன். இது நடுவரின் முடிவு நான் இதில் வெளிப்படையாக உடன்படாவில்லை. நாங்கள் போட்டியில் வெற்றி பெறாததற்கு இது (ராணா களமிறங்கியது) மட்டுமே முழு காரணம் இல்லை. எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. துபே வேகப்பந்து வீச்சாளர் அல்ல, ஆனால் ரானே வேகப்பந்து வீச்சாளர்.” என வீரர் மாற்று குறித்த தனது அதிருப்தியை ஜோஸ் பட்லர் வெளிப்படையாகவே கூறினார்.
அதே போல, போட்டியின் வரணையாளர்கள் கூட இந்த வீரர் மாற்றை வெகுவாக விமர்சனம் செய்தனர். இந்த முடிவை எடுத்தது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் எனக் கூறப்படுகிறது. இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது, துபேவுக்கு எப்படி ராணா மாற்று வீரராக களமிறங்குவார்? துபே சுழற்பந்து வீச்சாளர், அவர் டி20 பந்துவீச அனுமதிக்கப்படவில்லை. அப்படி இருக்க வேகப்பந்து வீச்சாளர் ராணாவை களமிறக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது என கிரிக்கெட் விமர்சகர்கள் மட்டுமல்ல ரசிகர்ளும் இணையதளத்தில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.