2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சுப்மன் கில் இதற்கு பதில் அளித்துள்ளார்.
![Virat Kohli shubman gill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-shubman-gill.webp)
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட தகுதி பெறுவார் என்று நேற்றைய தின போட்டியில் இந்திய அணியின் ஆட்ட நாயகன் ஷுப்மான் கில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வலது முழங்கால் காயம் காரணமாக நாக்பூரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இருந்து கோலி நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்த போட்டியிலாவது கோலி விளையாடுவாரா? காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் கோலி விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்தன.
அவர் இல்லாத போதிலும், இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதில், போட்டியில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்கத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் 59 ரன்களிலும், அக்ஷர் படேல் 51 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
ஆனால் சரவெடியாக வெடித்த கில் 87 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வீரர்களை மிரட்டினார். இந்த நிலையில், போட்டிக்குப் பிறகு, ஒளிபரப்பாளரிடம் பேசிய கில், கோலியின் நிலை குறித்து தெளிவுபடுத்தினார், காயம் சிறியது என்றும் கவலைக்குரியது அல்ல என்றும் கூறினார்.
இது குறித்து பேசிய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், “அவர் காலையில் எழுந்தபோது, அவரது முழங்காலில் சிறிது வீக்கம் இருந்தது. நேற்றைய பயிற்சி செய்யும் வரை அவர் நன்றாக தான் இருந்தார். கவலைப்பட ஒன்றுமில்லை, அடுத்த ஆட்டத்திற்கு அவர் நிச்சயமாக உடற்தகுதி பெறுவார். கோலிக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. அவர் நிச்சயமாக 2வது போட்டியில் விளையாடுவார் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இதற்கு முன், காயம் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் போது அவர் முதுகு வலி காரணமாக விளையாடவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போதும் நடந்துவிட கூடாது என்று கோலியின் காயம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், கோலி தகுதி பெறுவார் என்று ஷுப்மான் கில் உறுதிப்படுத்தியது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.