மேஜர் லீக் 2023.! அமெரிக்காவிலும் மாஸ் காட்டும் சூப்பர் கிங்ஸ்… 69 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.!
அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டி போல பல்வேறு நாடுகளில் உள்ளூர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்கியுள்ளது. இதில்சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அங்கும் அணிகளை ஏலத்தில் எடுத்து முறையே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், MI நியூ யார்க் எனும் பெயரில் களம் காணுகின்றன. இது போக 3 அணிகள் என மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு இந்த போட்டிகள் துவங்குகின்றன. இன்று முதல் நாள் ஆட்டத்தில் ஃபாப் டுபிளசி தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், சுனில் நரேன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக மில்லர் 61, கான்வே 55 ரன்களும் எடுத்து இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் 55 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும். இறுதியில் 14 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 112 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் டெக்சாஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.