பேட்டிங்கில் மிரட்டிய மதுரை அணி..! சேலம் அணியை வீழ்த்தி முதல் வெற்றி..!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய SLST vs MADURAI போட்டியில், மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், இன்று நடைபெற்ற 15வது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சீசெம் மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணியின் வீரர்கள், மதுரை அணியின் பந்துவீச்சில் தடுமாறிய நிலையில், 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது. மதுரை அணியில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகள், கௌதம் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 99 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மதுரை அணியில் முதலில் ஆதித்யா மற்றும் ஹரி நிஷாந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் நிஷாந்த் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிறகு ஆதித்யாவும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெகதீசன் மற்றும் அபிசேக் களமிறங்கி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் இணைந்து ரன்கள் எடுத்த நிலையில், ஜெகதீசன் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின், அபிசேக் மற்றும் ஸ்வப்னில் சிங் ஜோடி பொறுப்பாக விளையாடி சேலம் அணி நிர்ணயித்த இலக்கை அடைந்தனர். முடிவில், மதுரை அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்தது.
இதனால், மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக அபிசேக் 32* ரன்களும், ஸ்வப்னில் சிங் 25* ரன்களும், ஜெகதீசன் 21 ரன்களும் குவித்துள்ளனர்.