பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம்.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 56, சுப்மன் கில் 60, இருவரும் சிறப்பாக விளையாடிய ஒரே காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் திணறி கொண்டு விளையாடினார். அவர் தடுமாறி விளையாடினாலும் கூட மற்றொரு முனையில் இருந்த மாக்ரம் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் ரிஷப் பந்த் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு அடுத்ததாக பூரன் களமிறங்கி குஜராத் அணிக்கு பயத்தை காட்டினார் என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், ஷாய் கிஷோர் வீச வந்த முதல் ஓவரில் 3 சிக்ஸர் விளாசி லக்னோ அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். மற்றொரு முனையில் நின்றுகொண்டிருந்த மாக்ரம்மும் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும், களத்தில் வெறியாட்டம் பூரன் ஆடிக்கொண்டிருந்த காரணத்தால் அவருடைய விக்கெட்டை எப்படி எடுப்பது என்று தான் குஜராத் பந்துவீச்சாளர்கள் யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.
இருப்பினும் பூரன் அதிரடி நிற்கவே இல்லை, 23 பந்துகளில் அரைசதம் விளாசி எதிரணியை மிரள வைத்தார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக 42 பந்துகளில் வெற்றிக்கு 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதில் இருந்து நிதானமாக விளையாடி பூரன் அடுத்த ஒரு ஓவர் சாந்தமாக விளையாடி கொண்டு இருந்தார். பின் தனது கியரை அதிரடியில் மாற்றி 14 வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் விளாசினார். அதற்கு அடுத்ததாக ரஷித் கான் வீசிய பந்தில் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் ஆயுஷ் படோனியுடன் இணைந்து நிதானமாக விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த சமயத்தில் டேவிட் மில்லர் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற கடைசி 8 பந்துகளில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. போட்டி திக் திக் என சென்று கொண்டிருந்த நிலையில் 5 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது படோனி (28*) ஒரு பவுண்டரி அடித்து (வெற்றியை உறுதி செய்தார். பிறகு ஒரு சிக்ஸர் விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.
இருப்பினும் அணி வெற்றிக்கு பூரனுடைய அதிரடி ஆட்டமும் பெரிய காரணமாக அமைந்தது. 181 என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. மேலும், குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.