அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது. முதலில் இந்த போட்டி ஏப்ரல் 6 (ஞாயிற்று கிழமை) நடைபெற இருந்தது. அன்றைய தினம் ராம நவமி என்பதால் கொல்கத்தாவில் அன்றைய தினம் நடத்தப்படாமல் போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி அதிரடி ஆட்டம் காண்பிக்கிறோம் என்பது போல அதிரடி காட்டினார்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 47, மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அடுத்ததாக பூரன் களமிறங்கினார். அவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
களமிறங்கியவுடனே நீங்கள் மட்டும் தான் அதிரடி காட்டுவீர்களா? நாங்களும் அதிரடி காட்டுவோம் என்பது போல கொல்கத்தாவுக்கு அதிரடி காண்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் 15, சுனில் நரேன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 2 சிக்ஸர், 8 பவுண்டரி என மொத்தமாக 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு பிறகு ரமன்தீப் சிங் 1, அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 ஆகியோரும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு பக்கம் ஆட்டமிழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அவரும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 28 பந்துகளில் 62 ரன்கள் என கொல்கத்தா தவித்து கொண்டு இருந்தது.
இருப்பினும், ரசல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் களத்தில் நின்று கொண்டிருந்த காரணத்தால் கொல்கத்தா அணி வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ரசல் அவுட் ஆக நம்பிக்கை முற்றிலும் குறைந்தது. ரிங்கு சிங் கடைசி வரை போராடியும் கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லக்னோ அணிக்கு அதிரடி காட்டி கொல்கத்தா தோல்வி அடைந்த காரணத்தால் அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.