ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் பிறந்தாளான இன்று சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவர் மட்டும் இல்லாமல் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மும்பை அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு இஷான் கிஷனும், நேகல் வதேராவும் மும்பை அணிக்கு தூணாக நின்று பொறுமையுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
அவர்களை தொடர்ந்து டிம் டேவீட்டின் 18 பந்துக்கு 35 ரன்கள் என்ற ஒரு அதிரடி கேமியோவால் மும்பை அணி 20 ஓவருக்கு 7 விக்கெட்டை இழந்து144 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக வதேரா 46 ரன்கள் சேர்த்தார். அதே போல் லக்னோ அணியில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், 145 என்ற எளிய இலக்கை துரத்துவதற்கு லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
முதல் ஓவரில் தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னி முதல் பந்திலேயே ரன்ஸ் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கே.எல்.ராகுலும், மார்க்க ஸ்டோய்னிஸ்ஸும் அதிரடியாக விளையாட தொடங்கினர். அனால் துரதிஷ்டவசமாக கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஸ்டோய்னிஸ் மற்றும் தீபக் ஹூடா கூட்டணி அமைத்து விளையாடினார்கள்.
ஆனால், அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரை சதம் கடந்தார், சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் நிக்கோலஸ் பூரனும், ஆஷ்டன் டர்னரும் பொறுமையாக விளையாடும் போடும் பொழுது டர்னரும், ஆயுஷ் பதோனியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஆட்டத்தின் போக்கை விறுவிறுப்பாக மாற்றினார்கள்.
இறுதியில் நிக்கோலஸ் பூரனின் சிறப்பான விளையாட்டால் லக்னோ அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது. இதனால் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிபட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும், இந்த தோல்வியின் மூலம் மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி ஆகியுள்ளது.