கே.எல்.ராகுலை தக்க வைக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்? வெளியான தகவல்!
சென்னை : நடைபெறப் போகும் ஐபிஎல் 2025 ஆண்டுக்கான தொடரில் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
கடந்த ஐபிஎல் 2024 தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்தது. அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருப்பர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அதன் பிறகு கே.எல்.ராகுலை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு விருந்து கொடுத்து அந்த பிரச்னைக்கு அப்போது முற்றுப் புள்ளி வைத்தார். இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடர் அதாவது 2025 ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேறி பெங்களூரு அணிக்குச் செல்ல உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவை தற்போதைய லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறார். அந்த சந்திப்பில் கே.எல்.ராகுல் லக்னோ அணியிலே தொடர விருப்பம் தெரிவித்துள்ளார் என ஐபிஎல் வட்டாரங்கள் மூலம் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக லக்னோ அணியோ அல்லது கே.எல்.ராகுலோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
மேலும், இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் பிசிசிஐ வீரர்களைத் தக்க வைப்பதற்கு ஒரு சில விதிகளைக் கொண்டு வர இருக்கின்றனர். இதனால், அந்த விதிகளைப் பார்த்த பிறகே எந்த வீரர்களைத் தக்க வைக்க உள்ளோம், எந்த வீரர்களை விடுவிப்போம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என லக்னோ அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் மூலம் இதுபோன்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
ஒருவேளை கே.எல்.ராகுல் லக்னோ ஆனால் விடுவிக்கப்பட்டால், பெங்களூரூ அணி அவரை ஏலத்தில் அதிக தொகை கொடுத்து அணியில் எடுக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, லக்னோ அணி இந்த தக்க வைக்கும் விதிகளுக்காகக் காத்திருந்தாலும் இது குறித்து கே.எல்.ராகுல் என்ன முடிவு எடுப்பர் என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.