லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?
நடந்து வரும் ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகள் லக்னோ அணி விளையாடியுள்ள நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட் 0, 15, மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொண்ட போட்டியில் லக்னனோ படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
இந்த தொடரில் ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் லக்னோ தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்ததாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. லக்னோ அணி வெற்றி பெற்றாலும், ரிஷப் பண்ட் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் இதுவரை ரன்கள் எடுக்கவில்லை. மூன்று போட்டிகளில் 0, 15, மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவரை லக்னோ அணி 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நிலையில், அவருடைய ஆட்டம் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அவர் தொடர்ச்சியாக இப்படியான சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதே சமயம் நெட்டிசன்கள் பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்? என கலாய்க்கும் வகையில் பேசி வருகிறார்கள்.
மேலும், ஐபிஎல் போன்ற தொடர்களில் பல முன்னணி வீரர்கள் சீசனின் தொடக்கத்தில் சிறிது தடுமாறுவது வழக்கம். ரிஷப் பண்ட் ஒரு அதிரடி வீரர் என்றாலும், அவருக்கு சில போட்டிகள் பழைய பார்முக்கு திரும்ப தேவைப்படலாம். 2022 டிசம்பரில் நடந்த கார் விபத்துக்குப் பிறகு, 2024 ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக திரும்பி வந்தார். எனவே, தற்போதைய சிறிய தோல்விகள் அவரை பெரிதாக பாதிக்காது நிச்சியமாக பழைய பார்முக்கு திரும்புவார் எனவும் அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.