LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
18வது ஓவரில் இலக்கை எட்டி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.
LSG-ன் தொடக்க வீரர்களான ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்து முறையே 52 ரன்கள் மற்றும் 45 ரன்கள் விளாசி இருவரும் அவுட் ஆகினர்.
டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் 9 ரன்கள் எடுத்தும் அப்துல் சமத் 2 ரன்னிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். ஆயுஷ் படோனி 36 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். டேவிட் மில்லர் 14 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார்.
20 ஓவர் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் களமிறங்கியது.
தொடக்க வீரர் கருண் நாயர் 15 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அபிஷேக் போரல் 51 ரன்கள் அடித்த அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
18வது ஓவரில் இலக்கை எட்டி (161 ரன்கள்) லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. கே.எல் ராகுல் 42 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். இறுதியில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். கேப்டன் அக்சர் படேல் 20 பந்தில் 34 ரன்களுடன் களத்தில் நின்றனர்.