INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணி 49.3 ஓவர்கள் முடிவில் 264 ரன்கள் குவித்துள்ளது.

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம்” என பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்தது போல தொடக்கமும் அசத்தலாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தியாவுக்கு எதிராக பயங்கர பார்ம் வைத்திருக்கும் ட்ராவிஸ் ஹெட் எத்தனை ரன்கள் விளாச போகிறார் அவரை எத்தனை ரன்களில் இந்தியா விக்கெட் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. தொடக்கத்தில் அவருடைய விக்கெட்டை எடுக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும் இரண்டு முறை இந்திய அணி அதனை தவறவிட்டது.
பிறகு வழக்கம் போல இந்தியாவுக்கு எதிராக எப்படி விளையாடுவாரோ அதே போலவே அதிரடி காட்ட தொடங்கினார். ஆனால், இந்திய அணி மாஸ்டர் பிளான் செய்து வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்து 39 ரன்களில் அவருடைய விக்கெட்டை எடுத்தது. அவர் ஆட்டமிழந்த பிறகு பெருமூச்சு விட்ட இந்தியாவுக்கு அடுத்த குண்டை தூக்கிப்போடும் வகையில் களத்திற்கு வந்த ஆஸி கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அதிரடியாக விளையாடினார்.
அவருடன் இணைந்து கொண்டு அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தார். பின் அரை சதம் விளாசிய ஸ்மித் தனது கியரை மாற்றிக்கொண்டு அதிரடியில் இறங்கினார். இதன் காரணமாக, 50 ஓவர்களில் நிச்சயமாக ஆஸ்ரேலியா 300 ரன்களை தாண்டிவிடும் என எதிர்பார்த்தனர். அப்போது ஸ்டிவ் ஸ்மித் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு அடுத்ததாக வந்த மார்னஸ் லாபுசாக்னே 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ஆகியோரும் ஸ்மித்திற்கு முன்பே அட்டமிழந்து வெளியேறினார்கள். இதன் காரணமாக, ஆஸ்ரேலியா அணி ஒரு கட்டத்தில் 36.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இடத்தில் இருந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் க்ளென் மேக்ஸ்வெல் நிதானமாக விளையாடவேண்டும் என எதிர்பார்த்தனர்.
அப்படி எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, க்ளென் மேக்ஸ்வெல் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். அதைப்போல, அவருக்கு பிறகு வந்த பென் த்வார்ஷுயிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடி கலந்த நிதானத்துடன் அலெக்ஸ் கேரி அரை சதம் விளாசிய கையோடு நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி கொண்டிருந்தார்.
இருப்பினும் கடைசி நேரத்தில் ரன் ஓடி 60 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் கடைசி நேரத்தில் ஆஸ்ரேலியா திணறியது. கடைசி நேரத்தில் தொடர்ச்சியாக விக்கெட் இழந்த காரணத்தால் இறுதியாக 49.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்ரேலியா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு இலக்காக 265 ரன்கள் நிர்ணயம் செய்தது.
மேலும், இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்ரேலியா அணி 265 இலக்கு வைத்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.