7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், வார்னர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் பேர்ஸ்டோவ் 5 ரன்னில் விக்கெட்டை இழக்க மனிஷ் பாண்டே களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த வார்னர் 36 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே 51 ரன்கள் குவித்தார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.
143 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நரைன் ரன் எடுக்காமல் வெளியேறினார். பின்னர், நிதீஷ் ராணா களமிறங்க அவர் நிதானமாக விளையாடி 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பிறகு, களம் கண்ட தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமல் வெளியேற, இதைத்தொடர்ந்து, மோர்கன் இறங்கினார். சுப்மான் கில், மோர்கன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய வந்த சுப்மான் கில் அரைசதம் அடித்து 70 ரன்கள் குவித்தார். மோர்கன் 42 ரன்கள் எடுத்து இருவரும் கடைசிவரை களத்தில் நின்றனர்.
இறுதியாக, கொல்கத்தா அணி 18 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி புள்ளிகள் 2 பெற்று 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.