IPL2024: மரண அடி… 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா ..!
IPL2024: கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.
ஏனென்றால் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சீரான இடைவேளையில் பறிகொடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ராம் 20 ரன்களும் மட்டுமே எடுத்தனர். அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் 3 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டையும் வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
114 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். 2-வது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாச அடுத்த பந்தில் ஷாபாஸ் அகமது இடம் கேச்சை கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட தொடங்கினார். பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ் , வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடிக்காமல்39 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் வெங்கடேஷ் ஐயர் 52* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.