ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?
இந்த ஆண்டுக்கான முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள வீரர்களும் போட்டிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என புதிய தகவல் பரவி வருகிறது.
என்ன காரணம்?
கே.எல்.ராகுலின் மனைவி கர்ப்பமாக இருப்பதன் காரணமாக அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இந்த நேரத்தில் அவர் தனது மனைவி அதியா ஷெட்டியுடன் இருக்க விரும்புகிறார் என்ற காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே, இதன் காரணமாக அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடமுடியாத சூழல் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. தனிப்பட்ட இந்த காரணத்தை அணி நிர்வாகத்திடம் கூறி அவர் இந்த முடிவை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் கே.எல்.ராகுல் முடிவுக்கு குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை . விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அணியில் அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக யார் கேப்டனாக விளையாடி அணியை வழிநடத்தப்போகிறார்கள் என்கிற கேள்வியும் எழும்பியுள்ளது.
மேலும், டெல்லி அணி மார்ச் 24 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனும், மார்ச் 30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும் மோதவிருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இப்படியான போட்டிகளில் கே.எல்.ராகுல் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்துமா? அல்லது மற்ற வீரர்கள் இணைந்து கே.எல்.ராகுல் இல்லாதது தெரியாத அளவுக்கு விளையாடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.