இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இத்தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கிலம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25ல் கே.எல்.ராகுல் முன்னணி மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்தார். இருப்பினும், பிப்ரவரி 19 முதல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னை பரிசீலிக்க வேண்டாமென கே.எல்.ராகுல் கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தனியார் ஊடக பேட்டியில் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் T20 போட்டி ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஐந்து டி20 போட்டிகள் முடிவடைந்த பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது.
ஒருவேளை கே.எல். ராகுல் இடம்பெறாத பட்சத்தில், ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இங்கிலாந்து தொடரில் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.