16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் பொறுப்பாக விளையாடி அணிக்கு நல்லத் தொடக்கத்தை அமைத்தார். அவரையடுத்து களமிறங்கிய பானுகா, ரன்கள் ஏதும் எடுக்காமலும், லிவிங்ஸ்டன் 15 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து, பொறுப்பாக விளையாடிய ஷிகர் தவான் பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்த நிலையில், நிதிஷ் ராணா வீசிய பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், ஷாரு கான் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார்(17* ரன்கள்) களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 57 ரன்களும், ஜிதேஷ் சர்மா 21 ரன்களும், ஷாரு கான் 21* ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.