KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!
20 ஓவரில் 120 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஆல் அவுட் செய்து 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதனை அடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் (1), சுனில் நரேன் (7) அடுத்தடுத்து அவுட் ஆகினாலும், கேப்டன் ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷிவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 38 மற்றும் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.
அடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ரிங்கு சிங் 17 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசி 32 ரன்கள் விளாசி இறுதி வரை களத்தில் நின்றார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 200 ரன்கள் எடுத்திருந்தது.
20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய SRH அணியின் பேட்டிங் லைன் அப், KKR-ன் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் (4), 2வது ஓவரில் அபிஷேக் சர்மா (2), 3வது ஓவரில் இஷான் கிஷான் (2), 7வது ஓவரில் நிதிஷ் ரெட்டி (19), 10வது ஓவரில் கமிந்து மென்டிங் (27) என அடுத்தடுத்து அவுட் ஆகி தடுமாறினர்.
அடுத்ததாக வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். கிளாசன் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன் சொந்த மண்ணில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிரட்டலான பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார். ரசல் 2 விக்கெட் வீழ்த்தினார். ஹர்ஷத் ராணா, சுனில் நரேன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.