வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்…வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தது ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்த மோசமான சாதனைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இந்திய வீரர்கள் குறி வைத்து அவருடைய பந்தை வெளுத்து எடுத்தனர் என்று சொல்லலாம்.
திடீரென அவர்கள் மற்ற பந்துவீச்சாளர்களை விட்டுவிட்டு ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தை மட்டும் கூறி வைத்த காரணம் பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. ஏனென்றால், முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் கொடுத்த பேட்டியில் ” மற்ற பந்துவீச்சளர்களை விட எனக்கு என் மீது அதிகமாக நம்பிக்கை இருக்கிறது. எங்களுடைய அணியில் முதல் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தான் செயல்பட்டார்கள்.
ஆனால், எதிரணி வீரர்களுக்கு லக் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்களுடைய விக்கெட் கிடைக்கவில்லை. அவர்களுடைய அதிர்ஷடம் காரணமாக அவர்கள் அடித்த பல பந்துகள் காற்றில் மேலே சென்றன ஆனால் பீல்டர்களிடம் செல்லவில்லை. பந்துகள் கைகளுக்குச் சென்றால் அடுத்த ஆட்டத்தில் இந்தியா 40/6 என்று இருக்கும்” எனவும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுவதுபோல பேசியிருந்தார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்ததை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார்களா என இந்திய வீரர்கள் தெரியவில்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது போட்டியில் சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 60 ரன்களை அவர் வாரி வழங்கினார். T20 போட்டியில் ஆர்ச்சர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
ஜொஃப்ரா ஆர்ச்சர் தனது அதிவேக பந்து வீச்சினால் மிகவும் பிரபலமான ஒரு பந்துவீச்சாளர் தான். ஆனால், அவரை இந்திய வீரர்கள் வெளுத்து எடுத்தது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 60 ரன்களை அவர் வாரி வழங்கியதை பார்த்த நெட்டிசன்கள் இது உங்களுக்கு தேவை தான் எனவும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாம்” எனவும் தெரிவித்து வருகிறார்கள்.