ஜஸ்பிரித் பும்ரா அறுவை சிகிச்சை வெற்றிகரம்; 6 மாதங்கள் விளையாட வாய்ப்பில்லை.!
ஜஸ்பிரித் பும்ராவிற்கு, நியூசிலாந்தில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஜஸ்பிரித் பும்ரா, தொடர்ச்சியான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதுகெலும்பு நிலைகள் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரோவன் ஷவுட்டனால் பும்ராவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பும்ரா மேற்கொண்ட இந்த அறுவை சிகிச்சையால் அவரால் 6 மாதங்கள் வரை இந்திய அணிக்கு திரும்ப முடியாது, இதனால் ஆசிய கோப்பையில் பும்ரா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. மேலும் பும்ராவின் ஓய்வு மற்றும் பயிற்சி அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் காயமடைந்து போட்டிகளில் இருந்து பாதியில் வெளியேறினார். அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்தும் அவர் விலகினார், மேலும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வில்லை.