மீண்டும் மைல் கல்லை தொட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் …! கடைசி டெஸ்ட் போட்டியில் அபார சாதனை ..!
ஜேம்ஸ் ஆண்டர்சன் : இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மீண்டும் ஒரு புதிய மைல்கல் ரெக்கார்டை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்று பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் போட்டியானது முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், இந்த முதல் போட்டியோடு அவர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில், இன்று முடிவடைந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு இன்னிங்ஸை சேர்த்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.
அதனை தொடர்ந்து யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார். அது என்னவென்றால் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 50,000 பந்துகளுக்கு மேல் பந்து வீசி பெரிய மைல் கல்லையும் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். அதாவது, அவர் டெஸ்ட் போட்டிகளில் 40,001 பந்துகள், ஒருநாள் போட்டிகளில் 9,584 பந்துகள், சர்வதேச டி20 போட்டிகளில் 422 பந்துகள் வீசி இருக்கிறார்.
இதனால் மொத்தமாக 50,007 பந்துகளை வீசி இருக்கிறார். இந்த பட்டியலில் ஏற்கனவே இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வார்னே ஆகிய மூவர் மட்டுமே 50,000 பந்துகளுக்கு மேல் பந்து வீசி இந்த மைல் கல்லை தாண்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சாதனை படைத்ததற்கு அவரது ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.