மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?
மும்பை அணியில் இருந்து விலகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இனி 'கோவா' அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார் ஜெய்ஸ்வால். தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையை விட்டு வெளியேறி கோவா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வேலியாகியுள்ளது. U-19 வீரராக இருந்த காலத்தில் இருந்து ஜெய்ஸ்வால், மும்பை அணியில் விளையாடி வருகிறார். 23 வயதான அவர் ஜனவரி 2019 இல் சத்தீஸ்கருக்கு எதிராக வான்கடே மைதானத்தில் மும்பைக்காக முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.
மேலும் மும்பைக்காக 36 போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட தனது 3712 ரன்கள் அடித்துள்ளார். பிசிசிஐ உத்தரவுப்படி, அனைத்து இந்திய வீரர்களும் உடற்தகுதியுடன் இருந்தால் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஜெய்ஸ்வா கடைசியாக ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார்.
அந்த போட்டியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸைத் துவக்கி , இரண்டு இன்னிங்ஸ்களிலும் 4 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பிடத்தக்க வகையில், பல நட்சத்திர வீரர்களால் நிரம்பிய மும்பை அணியை ஜம்மு-காஷ்மீர் அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வால் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்காக விளையாடி வருகிறார், ஆனால் ரன்கள் எடுப்பதற்கு சிரமப்படுகிறார். இதுவரை மூன்று போட்டிகளில் 11.33 சராசரியாகவும் 106.25 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 34 ரன்கள் எடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதி முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்.