சென்னை அணியை கதறவிட்ட ஜெய்ஸ்வால், சிவம் துபே.., ராஜஸ்தான் அபார வெற்றி ..!
ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் ஆகியோர் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் 25 ரன்களில் டு பிளெசிஸ் தனது விக்கெட்டை இழக்க, சுரேஷ் ரெய்னா 2 ரன் எடுத்து ஏமாற்றத்தை அளித்தார். இதன் பின் மொயீன் அலி 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து ஒருபக்கம் ருதுராஜ் கெய்க்வாட் , மறுபுறம் ஜடேஜா அதிரடியாக விளையாட ருதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்களும், ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 189 ரன்களை எடுத்தனர். இதனால், 190 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
இதனால், ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய எவின் லூயிஸ் 12 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 27 ரன்கள் எடுத்து 6-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 77 ரன்கள் குவித்து இருந்தனர். அடுத்த ஓவரிலே ஜெய்ஸ்வால் தோனியிடம் கேட்சை கொடுத்து 50 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சாம்சன், சிவம் துபே அவர்களும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சிவம் துபே 31 பந்தில் அரைசதம் விளாசினார்.
நிதானமாக விளையாடிய சாம்சன் 28 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் சிவம் துபே 63* ரன்கள் எடுத்து நின்றார்.