1000-வது ஐபிஎலில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால்; மும்பை அணிக்கு இமாலய இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RR போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி அதிரடியாக பேட் செய்து 212/7 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎலின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அணி 72 ரன்கள் எடுத்த போது பட்லர் 18 ரன்களுக்கு விக்கெட் இழந்தார். இதையடுத்து பேட்டிங் இறங்கிய சாம்சன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். இதையடுத்து ஹோல்டர்(11) மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர்(8) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 8 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்தார். மும்பை அணி தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்களும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.