ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமனம்!
ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு, ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை முடிவு செய்து, ஒட்டுமொத்த வருவாய்க் குழுவிலிருந்து உறுப்பு நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதைக் கவனிக்கிறது.
இந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஐசிசி வாரியக் கூட்டங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தலைமையிலான பிசிசிஐ அணி ஆஸ்திரேலியா வந்தடைந்தது. இந்த நிலையில், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கிரெக் பார்க்லேவை இரண்டாவது முறையாக ஐசிசி கிரிக்கெட் அமைப்பின் இரண்டு வருட காலத்திற்கு தலைவராக மீண்டும் ஒருமனதாக ஐசிசி வாரியம் தேர்தெடுத்திருந்தது. நியூசிலந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லே நவம்பர் 2020 இல் முதன்முதலில் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார்.