ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் குழுவை புதுப்பிக்கும் பொறுப்பை ரிக்கி பாண்டிங் பெற்றுள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கி அதன் பிறகு 2013-ம் ஆண்டு மும்பை அணியுடன் ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தையும் முடித்து கொண்டார்.
அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு டெல்லி அணி விளையாட்டின் போக்கை மாற்றி அமைத்தார். ஒரு கட்டத்தில் மிகவும் மோசமாக செயல்பட்ட டெல்லி அணியை வேறு கட்டத்திற்கு நகர்த்தினார்.
அதே போல ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ள மோசமான சாதனையை படைத்த அணியாக பஞ்சாப் அணி இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப் பேற்றுள்ளார். இதனால், இந்த தொடரிலிருந்து பஞ்சாப் அணியின் விளையாட்டின் போக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவார் என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்ளுக்கு இருந்து வருகிறது.
ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால் மீதமுள்ள பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பவராக இருக்கிறார். இதனால், ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவையும் தேர்ந்தெடுத்து புதிதாக குழுவை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரிக்கி பாண்டிங் மெகா ஏலத்திற்கு முன்பாக எந்த வீரர்களை தக்க வைக்கலாம், எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்றும் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும் ரிக்கி பாண்டிங்கிடம் இருப்பதால் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் புதிய பஞ்சாப் அணியை உருவாக்கி, ஐபிஎல் தொடரில் ஒரு வலுவான அணியாக திகழ வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.