‘இது மாதிரி சதத்தை பார்த்தது இல்லை’..கம்பீரை மிரள வைத்த அபிஷேக் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதில், கடைசி போட்டியான 5-வது போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் விளாசியது.
அடுத்ததாக, பவுலிங்கிலும் அசத்தி இந்திய அணி இங்கிலாந்து அணியை (97)க்குள் சுருட்டியது. இந்த 5-வது போட்டியில் அதிரடியாக இந்திய அணி வெற்றிபெற்றதற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவும் ஒரு காரணம். ஏனென்றால், 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து 13 சிக்ஸர்கள் விளாசி மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினார். அது மட்டுமின்றி, 37 பந்துகளில் (100) சதம் விளாசி சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
எனவே, இவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவருடைய பேட்டிங்கை பாராட்டி வருகிறார்கள். அந்தவகையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் போட்டி முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் அபிஷேக் சர்மா பற்றி பேசினார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” அபிஷேக் சர்மா விளையாடிய விதம் மிகவும் அருமையாக உள்ளது.
நான் இதுவரை இப்படி ஒரு டி20 சதத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. ஏனென்றால், இந்த மாதிரி அருமையான பந்துவீச்சாளர்கள் வைத்திருக்கும் அணிக்கு எதிராக சதம் விளாசுவது என்பது பெரிய விஷயம். 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் மார்க் வுட் ஆகியோருடைய பந்துவீச்சை அபிஷேக் சர்மா எதிர்கொண்ட விதம் நன்றாக இருந்தது.
அதிகமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சதம் விளாசலாம். ஆனால், அதனை தவிர தரமான வீரர்கள் எதிர்பார்க்கும் பந்து வீச்சாளர்கள் யார் என்று கணக்கில் எடுத்தால், அவர்கள் தான் டி20 போட்டியில் அதிகமாக விளையாடுவார்கள். எனவே, அப்படியான முக்கிய பந்துவீச்சாளர்களை இந்த இளம் வீரர் முதல் பந்திலிருந்தே அவர்களை சமாளித்த விதம் வேறு மாதிரி இருந்தது ” எனவும் அபிஷேக் சர்மா ஆட்டத்தை பார்த்து கம்பீர் புகழ்ந்து பேசினார்.