“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!
நடப்பு சீசனில் சென்னை அணி சரியா ஆடல அது உண்மை தான், இதுக்கு அப்பறம் பாருங்க என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும் போட்டிகளில் அணி சிறப்பாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் சீசனில் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசியில் தத்தளித்து வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று சூப்பர் கிங்ஸ் அகாடமியின் கிளையை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடங்கி வைத்தார். அப்பொழுது அவருடன் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதனும் இருந்தார். துவக்க விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காசி விஸ்வநாதன், “தோல்விக்கு காரணமே கிடையாது சார். இது Game. விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும்.
வெற்றி பெறும்போது பாரட்டுறீங்க. தோற்றுவிட்டால் நல்லா பண்ணலனு சொல்றீங்க.. சரியா ஆடல என்பது உண்மைதான். அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கோம். 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம். அதனால், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு” என்று கூறியிருக்கிறார்.
நேற்றைய தினம் இவர் சென்னையில் நடந்து விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ” நடப்பு சீசனில் சிஎஸ்கே-ன் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்.
2010-ல் 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளை வென்று கோப்பையை வென்றது சென்னை அணி. அதே போன்று இந்த ஆண்டும் வெல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது ” என்றார்.