சரியாக விளையாட முடியாதது ஏமாற்றமா இருக்கு! தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் தோல்விக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா தனது பேட்டிங் குறித்து பேசினார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கடைசி நாள் (5ஆம் நாள்) ஆட்டத்தில் 340 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 79.1 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால், 4வது டெஸ்ட் போட்டியை 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியா அணி வெற்றிபெற்று இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னேறியுள்ளது. அதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் இழக்கும் சூழலில் இந்திய அணி உள்ளது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கான காரணத்தை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் என்ன செய்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்பதை நாங்கள் கணிக்க தவறிவிட்டோம். அது தான் எங்களுடைய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், தோல்வி என்பது போட்டிகளில் வரும் போகும் எனவே, தோல்விகளை நினைத்து வருத்திக்கொண்டு அடுத்தப்போட்டிகளில் அதனை சரி செய்ய முயற்சி செய்வோம். போட்டியில் வெற்றிபெறுவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் செய்தோம் ஆனால், பலனளிக்கவில்லை. 340 என்பது எளிதானது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் விக்கெட்களை இழக்காமல் கடைசியில் அடித்து ஆடலாம் என்று முடிவு எடுத்து இருந்தோம். ஆனால், நிலைமை வேறு மாதிரி மாறிவிட்டது.
அதனை தொடர்ந்து தன்னுடைய மோசமான பேட்டிங் பார்ம் குறித்து ரோஹித் சர்மா பேசுகையில் ” நான் பேட்டிங் செய்யும் போது பல விஷயங்களை செய்வதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக நான் பலனளிக்க மறுக்கின்றன. ஒரு பேட்ஸ்மேனாக சரியாக விளையாட முடியாதது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” எனவும் வேதனையுடன் ரோஹித் சர்மா பேசினார்.