12 ஓவர் தான்.. போட்டியை முடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி! வங்கதேசதுக்கு எதிராக சூப்பர் வெற்றி!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும் வங்கதேச மகளிர் அணியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
வங்கதேச அணி தொடக்கத்திலே ரன்கள் எடுக்க முயன்று மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், நிதானமாக ரன்களை எடுப்பதில் கவனம் செலுத்தாமல், அடித்து விளையாட முயற்சி செய்து விக்கெட்டில் கோட்டை விட்டது. இருப்பினும் அணியின் கேப்டனான நிகர் சுல்தானா மட்டும் நின்று தனி ஒரு ஆளாக 39 ரன்கள் சேர்த்தார்.
அவரைத் தாண்டியும் எந்த ஒரு வீராங்கனையும் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் வங்கதேச அணி ரன்கள் எடுப்பதில் சிரமத்துக்குள்ளானது. இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கரிஷ்மா ராம்ஹராக் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 104 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது தொடக்கம் முதலே வங்கதேச அணியின் பவுலர்களை துவம்சம் செய்து விளையாடினார்கள் தொடக்க வீராங்கனைகள்.
மேலும், தொடக்க வீராங்கனைகள் விக்கெட்டை எடுப்பதற்கு வங்கதேச பவுலர்களுக்கு கடும் சவாலாகவே அமைந்தது. ஆனால், சிறிது நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்டஃபைன் டெய்லர் காயம் காரணமாக 27 ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்.
அதன் பிறகு, 3-வது விக்கெடுக்கு களமிறங்கிய ஷெமைனும், ஹெய்லி மேத்யூவும் இணைந்து சிறப்பாக விளையாடினார்கள். இவர்களைத் தொடர்ந்து, டியான்ட்ரா டாட்டினும் அதிரடியாக விளையாடினார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 12.5 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழந்து 14 ரன்கள் எடுத்து அபார வெற்றி பதிவு செய்தது.
ஹெய்லி மேத்யூ 34 ரன்களும், ஸ்டாஃபனி டெய்லர் 27 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 21 ரன்களும், டியாண்ட்ரா டோட்டின் 19 ரன்களும் எடுத்திருந்தனர். வங்கதேச அணி தரப்பில் நகிதா அக்தர் மற்றும் மருஃபா அக்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளை பெற்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.