அவருடன் ஒப்பிடுவது மிகவும் தவறு ..! மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட் ..!
ருதுராஜ் கெய்க்வாட் : இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட், தற்போது பிசிசிஐக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகள் அடங்கிய சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-வது போட்டியானது இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், முதல் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வி அடைந்தது.
அதனை தொடர்ந்து அடுத்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்கள் அடித்து வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தார். மேலும், சமீபத்தில் பிசிசிஐ அவரிடம் பேட்டி ஒன்று எடுத்தனர் அதில் பத்திரிகையாளர், ‘இந்திய டி20 அணியில் விராட் கோலியின் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா?’ என்ற கேள்வியை கேட்டார்.
அந்த கேள்விக்கு ருதுராஜ் அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம் என பதிலளித்தார். அதில் அவர் கூறுகையில், “உண்மையில் அது மிகப்பெரிய பொறுப்பு, தோனி என்னிடம் கொடுத்த கேப்டன் பொறுப்பை போல அது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த தருணத்தில் விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது தவறானது. இந்த நேரத்தில் அவருடைய இடத்தை நிரப்ப முயற்சிப்பது பற்றி சிந்திப்பது சரியானதல்ல.
ஏனென்றால், அது மிகவும் கடினமான ஒன்று குறிப்பாக ஐபிஎல் தொடரில் நான் ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட தோனி இடத்தை நிரப்புவது போன்றதாகும். நீங்கள் உங்களின் சொந்த விளையாட்டை விளையாட வேண்டும். அதற்கு தான் நான் தற்போது முன்னுரிமை கொடுக்கிறேன். அணி என்ன விரும்புகிறதோ அதை நான் பேட்டிங்கிளை கொடுக்க முயற்சிக்கிறேன். அதே சமயம் துவக்க வீரராக விளையாடுவதற்கும் 3-வது இடத்தில் விளையாடுவதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை”, என்று கூறி இருந்தார்.