அரையிறுதிக்கு போனா மட்டும் போதாது! பைனலுக்கும் இந்தியா, பாகிஸ்தான் செல்லவேண்டும்- சோயப் அக்தர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியோடு ஊருக்கு திரும்பிவிடக்கூடாது, இறுதிப்போட்டியிலும் விளையாடவேண்டும் என்று அக்தர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நேற்றோடு நிறைவடைந்தன. நேற்று நடைபெற்ற போட்டியில் திருப்புமுனையாக நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது, இதனால் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஜிம்பாப்வேவை தோற்கடித்த இந்திய அணி குரூப் 2 வில் முதலிடம் பிடித்தது.
இதனால் குரூப் 2 வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் 1இல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிப்போட்டியில் தோற்று ஊருக்கு கிளம்பிவிடக்கூடாது, இறுதிப்போட்டியில் விளையாடவேண்டும் என்று கூறியுள்ளார்.
சிலதினங்களுக்கு முன் அக்தர், பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறும் என்று கூறியிருந்தார். ஆனால் எனது கருத்தை அவர்கள் பொய்யாக்கியுள்ளனர், நெதர்லாந்து அணிக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியும் வெல்ல முடியாத அளவு ஒரு பெரிய அணி கிடையாது, இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் தோற்று வெளியேறிவிடும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அக்தர் தனது கருத்திலிருந்து பின்வாங்கியுள்ளார், அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவேண்டும் என்றும் அதை நான் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.