சும்மா இல்ல .. அவங்க இடத்தை நிரப்புவது கடினம்- பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்.
விக்ரம் ரத்தோர் : இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட சுற்று பயணத்தில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் மேற்கொண்டு நடந்த அந்த தொடரின் 4 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்று 4-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரின் பேட்டிங் பார்ட்னெர்ஷிப்பை பற்றி பலரும் பல கருத்துக்கள் தெரிவித்தனர்.
அதில், இந்த இருவரும் இந்திய அணியின் பேட்டிங் முதுகு எலும்பாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் இடத்தை பிடித்து விடுவார்கள் என்றொரு கருத்து எழுந்தது. அதற்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் இதற்கு கருத்து தெரிவித்து ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவில் (ESPNCricinfo) பேசினார்.
அவர் பேசிய போது, “முடிவடைந்துள்ள ஜிம்பாப்வே தொடர் நம் இந்திய அணியின் டி20 கிரிக்கெட் அணி எப்படி இருக்கும் என்பதை காட்டி இருக்கிறது. ஆனால், இப்போதும் நமக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மைல்கல் புள்ளியை தொடுவதற்கு இன்னும் சில வருடங்கள் உள்ளது.
எனவே, அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். ஏன் என்றால் இந்திய கிரிக்கெட்டில் நிறைய ஆழம் இருக்கிறது. நம்மிடம் திறமையான நுணுக்கங்கள் நிறைந்த வீரர்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் போன்ற இன்னும் சில வீரர்கள் இப்போதே அடுத்த தலைமுறையில் அசத்த கூடியவர்களாக தங்களை நிரூபித்து வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டிலும் கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல தயாராகவும் உள்ளனர்.அது போல இன்னும் நிறைய வீரர்கள் வருகின்றனர். ஆனால் கில் மற்றும் ஜெய்ஸ்வால் நீண்ட காலமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடியவர்களாக தங்களை நிலை நிறுத்தி உள்ளனர்.
ஆனால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால், அவர்கள் வரும் காலங்களில் இந்திய அணி பேட்டிங் துறையின் முதுகெலும்பாக இருப்பார்கள்”, என்று கூறினார்.