நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!
விஜய் ஹசாரே டிராபி 2024-25 தொடரில் இந்திய வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் மாறி மாறி தங்களுடைய அணிக்காக சதம் விளாசியுள்ளனர்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு முக்கிய போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்றே சொல்லலாம். இருப்பினும், என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் இந்திய அணியின் நிலையான வீரர்களாக இருப்பார்கள் என தங்களுக்கே ரசிகர்கள் ஆறுதலை தெரிவித்து மனதை தேத்தி கொண்டு வருகிறார்கள்.
இளம் வீரர்களும் இந்திய அணியில் தங்களுடைய பெயர் இடம்பெறவில்லை என்றாலும் கூட தங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அடிக்கடி சில அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்திய அணியின் எதிர்காலம் நாங்கள் தான் என்பதையும் கட்டிக்கொண்டு வருகிறார்கள். அப்படி தான் தற்போது விஜய் ஹசாரே டிராபி 2024-25 இல் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் மாறி மாறி சதம் விளாசியுள்ளனர்.
இந்த தொடரில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் கேப்டனாக விளையாடி வருகிறார். ருதுராஜ் மகாராஷ்டிரா அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். இவர்கள் இருவருமே அந்தந்த அணிகளுக்காக சிக்ஸர் மழையை தெறிக்கவிட்டு சதம் விளாசியுள்ளனர்.
இஷான் கிஷன்
ஜெய்ப்பூரில் நடந்த மணிப்பூருக்கு எதிரான குரூப் ஏ போட்டியில் இஷான் 78 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். ஜார்கண்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக வந்த இஷான் 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். 64 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த அவருடைய பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் இஷான் கிஷன் பேக் டூ பார்ம் என கூறி வருகிறார்கள். இந்த போட்டியிலும் ஜார்கண்ட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ருதுராஜ்
அவரை போல, மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ருதுராஜ் குரூப் பி போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில், 74 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 64 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவரை மிஞ்சும் அளவுக்கு 57 பந்துகளில் ருதுராஜ் சதம் விளாசினார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக, 9 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றிக் கொடியை உயர்த்தியது.
இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் சதங்கள் அடித்துள்ள நிலையில், நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இவர்களுடைய பெயர் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. இவர்களுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.