இதுதான் கம்பீரோட பயிற்சியா? அப்போ சாம்பியன்ஸ் டிராபி கதி? கொந்தளிக்கும் ரசிகர்கள் ..!
SLvsIND : இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற பிறகு, இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வேவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதிலும், அபாரமாகத் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி அதனைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது.
இதில் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியை இந்திய அணியின் வீரர்களின் சொதப்பலால் அப்போட்டி ட்ராவில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணியைத் திணற வைத்து இலங்கை அணி அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 எனக் கைப்பற்றியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 27 வருடங்கள் கழித்து இந்திய அணியை வீழ்த்தி ஒரு தொடரைக் கைப்பற்றி இருக்கிறது இலங்கை அணி.
இதன் விளைவாக இந்திய அணி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் நேற்று இணையத்தில், ‘இதுதான் கம்பீரோட பயிற்சியா? அப்போ சாம்பியன்ஸ் டிராபி அவ்வளவு தானா?’ என அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். அதன்படி, இந்த 27 வருடத்தில் பல பயிற்சியாளர்கள் பல கேப்டன்கள் இந்திய அணியை வைத்து இலங்கை அணியுடனான தொடரைக் கைப்பற்றிக் கொண்டே வந்தது.
ஆனால், தற்போது புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதிவேற்ற பிறகு இப்படி ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணி எந்த ஒரு ஒருநாள் தொடரிலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இது இலங்கை அணியுடனான தொடரைத் தோல்வியடைவதற்கு முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இதே போல ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு இருந்தால் அடுத்த ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதைவிட மோசமாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இந்திய அணி அடுத்ததாக வருகிற செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடவுள்ளனர். இதனால் இது போன்ற சிறிய அணிகளுடனான தொடருக்கு அணியின் இளம் வீரர்களைத் தயார் செய்து விளையாட வைக்க வேண்டும்.
அதேபோல ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் போது அதற்கு ஏற்றவாறு வீரர்களைத் தயார் செய்து விளையாட வைக்கவும், ரசிகர்கள் கவுதம் கம்பீருக்குப் பரிந்துரை செய்து வருகின்றனர். மேலும், இந்த தோல்வியிலிருந்து இந்திய அணியும், பயிற்சியாளர் கம்பீரும் மீண்டு வந்து தங்களை நிரூபித்துக் காட்டுவார்களா என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்.