ரோஹித் சர்மா உண்டா இல்லையா? கெளதம் கம்பீர் சொன்ன பதிலால் குழப்பத்தில் ரசிகர்கள்!
சிட்னி டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம் செய்யப்படுவாரா என்கிற கேள்விக்கு இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
சிட்னி : கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு காரணமே, நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அணிகளின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (3) போட்டிகள் என சரியாக விளையாடாதது தான்.
எனவே, ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் சரியாக விளையாடாத வீரர்களுக்கு பதில் வேறு வீரர்கள் களமிறக்கப்படுவார்களா? அல்லது அதே இந்திய படை தான் மீண்டும் களமிறங்குகிறதா? என்கிற பல்வேறு கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கிறது.
மேலும், ரோஹித் சர்மா தான் கடந்த 3 போட்டிகளாக அணியை கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டிகளில் அணி வெற்றியும் பெறவில்லை.ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் பார்மும் கவலைக்கிடமாக உள்ளது. முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக வழிநடத்திய நிலையில், அந்த போட்டியில் இந்திய வெற்றிபெற்றது. எனவே, கடைசி போட்டி முக்கியமானது என்பதால் ரோஹித் சர்மாவை நீக்கம் செய்ய திட்டமிடபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நாளை விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துவிட்டு சென்றார். இது குறித்து பேசிய கெளதம் கம்பீர் ” ரோஹித் சர்மா இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். ரோஹித் நாளை விளையாடும் அணியில் இருப்பாரா இல்லையா என்பது பற்றி விக்கெட்டை பார்த்துவிட்டு நாங்கள் தேர்வு செய்வோம். பின்னர் விளையாடும் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியீடுவோம்” எனவும் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவி கொண்டு இருக்கிறது. எனவே, இப்போது கடைசி போட்டியில் அவர் விளையாடுவதே சந்தேகம் என்கிற வகையில் கெளதம் கம்பீர் பதில் அளித்துள்ள காரணத்தால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.