ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா பதிரானா? சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி குண்டை தூக்கிப்போட்ட செய்தி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை வீரர் பதிரானா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல்கள் வந்ததாக அனிருத் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனையும் சிறப்பாக வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 23 -ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் போராடி சென்னை இந்த ஆண்டுக்கான முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில், அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பதிரானா இல்லாமல் வெற்றிபெற்றது என்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயமாகவும் அமைந்தது.
ஏனென்றால், காயம் காரணமாக பதிரானா முதல் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை ரசிகர்கள் அவர் இல்லை என்றால் எப்படி நன்றாக இருக்கும்? என கேள்வி எழுப்பினார்கள் அத்துடன் நெட்டிசன்கள் நிச்சியமாக அவர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக இருக்கும் என பேசி வந்தார்கள். ஆனால், அவர் இல்லாமலே மற்ற வீரர்களை வைத்தே பரம எதிரியான மும்பையை ருதுராஜ் வீழ்த்திவிட்டார். இருப்பினும், பதிரானாவுக்கு என்ன காயம்? அவருக்கு எப்போது சரியாகி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமாக பதிரானா விளையாடும் வாய்ப்புகள் குறைவு என தனக்கு தகவல் கிடைத்ததாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பிசிசிஐயின் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிறிஸ் ஸ்ரீகாந்த் உடனான கலந்துரையாடலின் போது முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அனிருத் ஸ்ரீகாந்த் ” அவருக்கு காயம் காரணமாக விளையாடமுடியவில்லையா? அல்லது இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் இந்த சீசன் முழுவதும் விளையாடமாட்டார் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க கூடாது என்று நானும் ரசிகர்களை போலவே வேண்டிக்கொள்கிறேன். ஐபிஎல் என்றாலே இந்த மாதிரி செய்திகள் வரும். ஆனால், இந்த செய்தி உண்மையாக இருக்க கூடாது” எனவும் அனிருத் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதற்கு வாய்ப்பு இல்லை அடுத்த போட்டியில் விளையாடுவார் போலியான செய்திகளை பரப்பவேண்டாம் என கூறி வருகிறார்கள்.
உண்மையில் பதிரானாவுக்கு என்ன காயம் ஏற்பட்டது அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்கிற விவரம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்போது அவர் நடப்பாண்டு சீசனில் இருந்து விலகுவதாக தகவல்கள் பரவி வருகிறது என்பதால் சென்னை அணி நிர்வாகம் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.