இவளோ டிமாண்டடா இவருக்கு? ரிங்கு சிங்கை குறி வைக்கும் 3 ஐபிஎல் அணிகள்!
சென்னை : இந்திய அணியின் இளம் வீரரான ரிங்கு சிங்கை, நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 3 அணிகள் எடுக்கக் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும், கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றும் வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளுக்குள்ளே பல மாற்றங்களைச் செய்யப் போகும் நிலையில், பல ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளியாகி வருகிறது. அதன்படி, தற்போது இந்திய அணியின் இளம் வீரரும், கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ரிங்கு சிங்கை எடுப்பதற்கு 3 அணிகளுக்குள் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், ரிங்கு சிங்கிற்கு ஏலத்தில் டிமாண்ட் அதிகரித்து உள்ளதாக ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
ரிங்கு சிங் இதற்கு முன்னரே பெங்களூரு அணியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்குக் காரணம் அவர் ‘விராட் கோலி’யின் தீவிர ரசிகன் என்பதால் தான். மேலும், பெங்களூரு அணியும் தங்களது எதிர்காலத்தின் திட்டத்தைக் கணக்கில் வைத்தது அதிரடி பேட்ஸ்மேன்களை ஏலத்தில் எடுக்கப் போவதாகத் தெரியவந்துள்ளது.
இதனால், ஒருவேளை அவரை ஏலத்தில் கொல்கத்தா அணி விடுவித்தால் கண்டிப்பாக அவரை எடுப்பதற்கான போட்டியில் பெங்களூரு அணி ஆர்வம் காட்டுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் :
யூ.பியில் பிறந்த இடமாகக் கொண்ட ரிங்கு சிங்கை, கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்டால், லக்னோ அணி பெங்களூரு அணிக்கு அடுத்தபடியாக அணியில் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லக்னோ அணிக்கு ஒரு மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் சற்று தடுமாற்றம் இருப்பதால், ரிங்குவை அணியில் எடுத்தால் அந்த இடத்தை கட்சிதமாக அவர் பூர்த்தி செய்யும் வீரராக இருப்பார் எனக் கருதி அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் :
கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற கொல்கத்தா-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஒரு லீக் போட்டியில், கடைசி ஓவரில் 5 சிக்கர்களைத் தொடர்ச்சியாக அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்திருப்பார். அந்த 5 சிக்ஸர்கள் தான் அவரது வாழ்க்கையை மாற்றியதென்றே கூறலாம்.
இதனால், லக்னோ அணியைப் போலவே குஜராத் அணியும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசை தோய்வாக இருப்பதால் அந்த இடத்தை பூர்த்தி செய்ய ரிங்குவை ஏலத்தில் குறி வைக்கலாம் என ரசிகர்களால் கருதப்படுகிறது. டேவிட் மில்லர் மற்றும் ராகுல் தெவாடியாவைத் தவிர, குஜராத் அணியில் மேலும் ஒரு நல்ல பினிஷரை அணியில் வைக்கலாம் என்பதற்காக ரிங்குவை ஏலத்தில் எடுக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.