#IPLMiniAuction2023: அதிக அடிப்படை விலையை கொண்ட இந்திய வீரர்கள்.. மினி ஏலத்திற்கான சுவாரஸ்ய தகவல்கள்….
ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்ற விவரம் வெளியீடு.
ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்பது குறித்து விவரம் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2023 ஏலத்தில் இந்திய வீரர்களில் மயங்க் அகர்வால் மற்றும் மணீஷ் பாண்டே அதிக அடிப்படை விலைகளை கொண்டுள்ளனர்.
இருவரும் தங்களது அடிப்படை விலையை தலா ரூ.1 கோடி என பட்டியலிட்டுள்ளனர். எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் அடிப்படை விலை ரூ.1.5 கோடி அல்லது ரூ.2 கோடி கிடையாது. குறிப்பாக, மினி ஏலத்தில் பல இந்தியர்களின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என பட்டியலிடப்பட்டுள்ளது. அவர்களில் அஜிங்க்யா ரஹானே, ஜெய்தேவ் உனத்கட், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் அடங்குவர்.