மன்கட் ரன்-அவுட்: ஏற்கனவே அனுபவமுள்ள பட்லர்,அஷ்வின்! எப்போது நடந்தது?
ஏற்கனவே நடைபெற்ற சர்வதேச போட்டியில் பட்லர் மன்கட் முறையில் விக்கெட்டை இழந்துள்ளார்.
நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய பட்லர் விக்கெட்டை அஷ்வின் மன்கட் முறையில் வீழ்த்தியதுதான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 என்ற இலக்கை விரட்டியபோது அந்த துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஆரம்ப முதலே அதிரடியாகத்தான் விளையாடி வந்தார்.அப்போது அஷ்வின் 13 ஓவரின் 5 வது பந்தை வீச முயன்றார் ,அந்த சமயத்தில் சாம்சன் எதிர் முனையில் பேட்டிங் செய்ய மறுமுனையில் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்களுடன் இருந்தார்,அப்போது அஷ்வின் பந்தை வீசாமல் எல்லைக்கோட்டை விட்டு வெளியே சென்ற பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
பின்னர் மூன்றாவது நடுவர் விக்கெட் என்று தெரிவித்ததும்,ஆக்ரோஷமாக சென்றார் பட்லர்.இவரது விக்கெட் ராஜஸ்தான் அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது மட்டும் அல்லாமல் அணி தோல்வி அடையவும் முக்கிய காரணமாகவும் அமைந்தது.
ஆனால் இது தொடர்பாக அஷ்வின் கூறுகையில்,பட்லரை மன்கட்’ முறையில் அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் மன்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்திய முதலே இந்த விவகாரம் பேசும் பொருளாக அமைந்தது.குறிப்பாக அஷ்வினின் இந்த செயலை மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வந்தது.
ஆனால் மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்வது என்பது அஷ்வினுக்கு ஒன்றும் புதிதல்ல சரியாக 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பேட்ஸ்மன் லகிரு திரிமணாவை மன்கட் முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தார். ஆனால் அப்போது களத்தில் இருந்த நடுவர்கள் உடனடியாக அணியின் முன்னணி வீரர்களான சச்சினையும்,சேவாக்கையும் அழைத்து கருத்து கேட்டனர். அவர்கள் இருவரும் அவுட் கொடுக்க வேண்டாம் ஆட்டம் தொடரட்டும் என தெரிவித்தனர்.
அதேபோல் ஜோஸ் பட்லருக்கு மன்கட் முறையில் ஏற்கனவே விக்கெட்டை இழந்த அனுபவம் உண்டு.சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து – இலங்கைக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மன்கட் ரன் அவுட்டானார். அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் ஜோஸ் பட்லரை இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே “மன்கட்” முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.போட்டி முடிந்த பின்னர் இலங்கை அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதில் பட்லரை ஏற்கனவே எச்சரித்தோம் ,ஆனால் அவர் கேட்கவில்லை.எனவே இறுதியாக அவரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தோம் என்று தெரிவித்தனர்.
தற்போது வரை மன்கட் முறை என்பது கிரிக்கெட் விளையாட்டை பொருத்தவரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தான் வருகிறது.