IPL 2018:11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில்வானவேடிக்கை மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது …!
ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகிறது.
சென்னை அணியை பொறுத்தவரை, சூதாட்ட சர்ச்சையிலிருந்து மீண்டு 2 ஆண்டு தடைக்கு பின் தடம் பதிக்கிறது. வழக்கமான துவக்க ஜோடியான, டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் இல்லாததால், தமிழகத்தின் முரளி விஜய் துவக்கம் தருவார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு டுபிளசி ‘பார்ட்னர்ஷிப்’ தருவார் எனத்தெரிகிறது. வாட்சனும் நம்பிக்கை தரலாம்.
‘மிடில்-ஆர்டரில்’ ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ் இருக்கின்றனர். ‘தல’ தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 6வது இடத்தில் களம் காணும் இவரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு, முன்வரிசையில் விளையாடலாம். கடைசி கட்டத்தில் ரன் சேர்க்க ‘ஆல்-ரவுண்டர்’ ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளனர்.
இன்றைய பல முன்னணி பவுலர்கள் தோனியால் பட்டைத் தீட்டப்பட்டவர்கள்தான். இதனால், கிடைத்த வாய்ப்பை வேகப்பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாகூர், லுங்கிடி பயன்படுத்தினால் நல்லது. வாட்சனின் அனுபவமே அணிக்கு நம்பிக்கை தருகிறது. ‘சுழலில்’ தமிழகத்தின் அஷ்வின் இல்லாத குறையை ஹர்பஜன், ஜடேஜா, இம்ரான் தாகிர் தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். கடந்த 10 ஆண்டாக, மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன், அதே அணியை எதிர்த்து களம் காண்பது இது முதல் முறை ஆகும்.
மும்பை அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வருகிறது. துவக்கத்தில் எதிரணி பந்துவீச்சை சிதறடிப்பதில் கைதேர்ந்தவர் ரோகித். இவருக்கு பக்கபலமாக, லீவிஸ், போலார்டு, சூர்யகுமார் யாதவ் திகழ்கின்றனர். சகோதர்களான ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யாவின் ‘ஆல்-ரவுண்டர்’ பங்களிப்பு நிச்சயம் தேவை.
பவுலிங்
‘யார்க்கர்’ ஸ்பெஷல் மலிங்கா இம்முறை பவுலிங் ஆலோசகராக மாறிவிட்டாலும், பும்ரா மிரட்டுகிறார். கடைசி கட்ட ஓவரில் கஞ்சனாக மாறும் இவரின் செயல்பாடு அசர வைக்கிறது. கம்மின்ஸ், பென் கட்டிங், முஸ்தபிஜுர் ரஹ்மான் உள்ளிட்ட ‘வேகங்கள்’ இருப்பதால் ‘லெவன்’ அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படலாம். சுழல் பணிக்கு தனஞ்செயா, குர்னால் பாண்ட்யா, அன்குல் ராய் என அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பது மும்பை அணிக்கு பின்னடைவு.
இரண்டு ஆண்டுக்குப்பின் பங்கேற்கும் முதல் போட்டியில் வெற்றியை நோக்கி சென்னையும், தொடரை வெற்றியுடன் துவக்க மும்பையும் மோதுவதால் சற்று ‘சூடான டுவென்டி-20’ போட்டியை காணலாம்.
முதல் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தில்தான், தொடரின் துவக்கவிழாவும் நடக்கவுள்ளது. மாலை 5 மணிக்கு துவங்கி ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அனைத்து கேப்டன்களும் கலந்து கொள்வர். இம்முறை, இன்றைய போட்டிக்கான கேப்டன்களான தோனி (சென்னை), ரோகித் (மும்பை) மட்டும் பங்கேற்பர். துவக்க விழா நிகழ்ச்சியில், ஹிர்திக் ரோஷன் பங்கேற்பார். வருண் தவான், ஜாக்குலின் பெர்னான்டஸ், பிரபு தேவா, தமன்னா என பல திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.அவர்களின் நடனம் தற்போது நடைபெற்று வருகிறது.
‘துார்தர்ஷனில்’ ஒளிபரப்பு
ஐ.பி.எல்., போட்டிகள் முதல் முறையாக ‘துார்தர்ஷன் சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து ‘ஸ்டார்’ இந்தியா தலைமை செயல் அதிகாரி உதய் ஷங்கர் கூறுகையில்,” சர்வதேச போட்டிகளை மத்திய அரசின் ‘துார்தர்ஷன் சேனலுடன்’ நாங்கள் பகிர்ந்து கொள்வது இல்லை. கட்டண ‘சேனல்’ இல்லாத இடத்திலும், ஐ.பி.எல்., போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறோம். இதற்காக, வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் இரண்டு போட்டியில் ஏதாவது ஒன்றை ‘துார்தர்ஷன்’ ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளோம். இப்போட்டி எங்கள் ‘சேனலை’ விட, ஒரு மணி நேரம் தாமதமாகவே ஒளிபரப்பப்படும்,” என்றார். இதில் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை ஸ்டார் நிறுவனத்திற்கு தர, ‘துார்தர்ஷன்’ ஒப்பந்தம் செய்து உள்ளது.