IPL 2018: கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு …!விழிபிதுங்கும் சிஎஸ்கே -கேகேஆர் வீரர்கள் …!
சென்னை – கொல்கத்தா அணி வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நிலையில் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணி நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை வந்துள்ள இரு அணி வீரர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், கிரிக்கெட் வீரர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளன.
இதனால், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலின் 3 நுழைவாயில்களும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதுடன், உள்ளே நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல், கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு வரும் நபர்கள் கொண்டுவரும் உடைமைகளும், பொருட்களும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
வழக்கமாக, சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், போட்டி மற்றும் பயிற்சி இல்லாத நேரங்களில், வெளியிடங்களுக்கும், சுற்றுலா பகுதிகளுக்கும் சென்று வருவார்கள். ஆனால், மிரட்டல் காரணமாக, அவர்களுக்கும் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதையடுத்து, நேற்று முன் தினமே சென்னை வந்துவிட்ட இரு அணி கிரிக்கெட் வீரர்கள் இதுவரை வெளியிடங்கள் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.