முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். மற்ற வீர்களான கேப்டன் ரஹானே 13, பென் ஸ்டோக்ஸ் 5, திரிபாதி 17 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித்கான் ‘லெக்பிரேக்’ பந்துவீச்சை சமாளிக்க பென் ஸ்டோக்ஸ், திரிபாதி, பட்லர் ஆகியோர் திணறியது பெரும் வேடிக்கையாக அமைந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் கவுல், சஹிப் அல்ஹசன் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளையும், ராஷித்கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். ஆர்கி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ரஹானே உள்ளிட்ட வலிமையான பேட்டிங் வரிசை இருந்தும் 125 ரன்களில் சுருண்டனர்.
தொடர்ந்து பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 15.5 ஓவர்களில் ஒருவிக்கெட்டை இழந்து இலக்கை அடைந்தனர். ஷிகர் தவாண் 77 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த போட்டிக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கயே ரஹானே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த போட்டியில் நாங்கள் குறைந்தபட்சம் 150 முதல் 160 ரன்களாகவது சேர்த்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம். ஏனென்றால், இந்த ஆடுகளத்தில் மித வேகப்பந்துவீச்சு சிறப்பாக எடுபட்டது.
ஆனால், எங்கள் அணியில் உருப்படியாக ஒரு பாட்னர்ஷிப் கூட அமையாதது எங்களின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்ததால், எந்த பாட்னர்ஷிப்பும் ஒழுங்காக அமையவில்லை. எங்களுக்கு இது முதல்போட்டிதான், இதில் இருந்து பாடங்களைக் கற்று அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்.
அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களான ஆர்கே ஷார்ட் ‘பிக்பாஷ்’ போட்டியில் விளையாடிய அனுபவம் உடையவர். ஜோஸ்பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் எந்த அளவுக்கு பேட்டிங்கில் ஆபத்தானவர்கள் என்பது நமக்கு தெரியும், பந்துவீச்சில் பென் லாஹ்ன் சிறப்பாக செயல்படக்கூடியவர். ஆதலால், வெளிநாட்டு வீரர்கள் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.
எங்கள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவுதான் அதில் மாற்றமில்லை. ஸ்மித் சிறந்த வீரர். இப்போதுள்ள நிலையில் அனைவரும் எந்த அளவுக்கு அணிக்கு பங்களிப்பு செய்கிறோம் என்பதுதான்.
சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கவுல், பில்லி ஸ்டான்லேக், புவனேஷ்குமார் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதிலும் கவுல் அடிக்கடி தனது பந்துவீச்சு வேகத்தை மாற்றி அமைத்து வீசியதும், துல்லியமாக லைன் லென்த்தில் வீசியதும் பேட்டிஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.