IPL 2018:வெற்றி யாருக்கு?கடைசி இடமும் ,இரண்டாமிடம் போட்டி!சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதல்!
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடம் வகிப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இதனால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். கடந்த ஆட்டத்தில் வலுவான பந்து வீச்சை கொண்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சென்னை அணி துரத்தியது. தொடக்க வீரரான அம்பாட்டி ராயுடு சதம் விளாசி அசத்தினார்.
இந்த சீசனில் 48.63 சராசரியுடன் 535 ரன்கள் வேட்டையாடி உள்ள ராயுடுவிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். 424 ரன்கள் குவித்துள்ள மற்றொரு தொடக்க வீரரான ஷேன் வாட்சன், 103.25 ஸ்டிரைக் ரேட்டுடன் 413 ரன்கள் சேர்த்துள்ள தோனி ஆகியோரும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர். 3 அரை சதங்களுடன் 315 ரன்கள் சேர்த்துள்ள சுரேஷ் ரெய்னாவும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக அவரிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் சென்னை அணி தனிப்பட்ட வீரரை சார்ந்து இல்லை. 11 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ஷர்துல் தாக்குர், 9 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள டுவைன் பிராவோ மற்றும் தொடக்க ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் இளம் வீரரான தீபக் ஷகார் ஆகியோர் பலம் சேர்த்து வருகின்றனர். அனுபவ வீரர்களான ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக இவர்கள் எழுச்சி காண வேண்டும்.
டெல்லி அணி வழக்கம் போல இந்த சீசனிலும் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் பொறுப்பேற்ற பிறகும் காட்சிகள் மாறவில்லை. 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களையும் கவுரவமான முறையில் விளையாடி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஒரு சதம், 4 அரை சதம் என 582 ரன்கள் குவித்துள்ள ரிஷப் பந்த், சென்னை பந்து வீச்சாளர்களுக்கு தொல்லைதரக்கூடும். இதேபோல் நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிச்சானே, பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.