அப்போது ஸ்கோர் 4.5 ஓவர்களில் 38 ஆக இருந்தது. இதையடுத்து மொயின் அலி களமிறங்கினார். பவர்பிளேவில் பெங்களூரு அணி 44 ரன்கள் சேர்த்தது. பசில் தம்பி வீசிய 8-வது ஓவரில் மொயின் அலி தொடர்ச்சியாக மிட் ஆஃப் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். தொடர்ந்து சந்தீப் சர்மா, ரஷித் கான் ஆகியோரது ஓவர்களிலும் மொயின் அலி சிக்ஸர் விளாசினார். சித்தார்த் கவுல் வீசிய 12-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 2 பவுண்டரிகளும், மொயின் அலி ஒரு சிக்ஸரும் விளாச அந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய மொயின் அலி 25 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார். மறுமுனையில் நேர்த்தியாக பேட் செய்த டி வில்லியர்ஸ் 32 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
பசில் தம்பி வீசிய 13-வது ஓவரில் டி வில்லியர்ஸ் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாச, பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆன் திசையில் மொயின் அலி சிக்ஸர் விளாசி அசத்தினார். அச்சுறுத்தலாக விளங்கிய இந்த ஜோடியை 15-வது ஓவரில் ரஷித் கான் வெளியேற்றினார். டி வில்லியர்ஸ் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவணிடம் கேட்ச் கொடுத்தும், மொயின் அலி 34 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசிய நிலையில் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மன்தீப் சிங் (4), சித்தார்த் கவுல் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய காலின் டி கிராண்ட் ஹோம் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் சித்தார்த் கவுல் பந்தில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. சர்ப்ராஸ் கான் 22, டிம் சவுதி ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து 219 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் பேட்டிங்கை தொடங்கியது.